Saturday, January 17, 2026

‘மேன்ஷன்’ - பா. சரவணகுமரன்

ஒதம்பல் நாவல் அறிமுகக் கூட்டம் நடந்த அன்று எழுத்தாளர் பா. சரவணகுமரனின் ‘மேன்ஷன்’ நாவலும் வெளியாகியது. எழுத்தாளரை அன்றுதான் அறிகிறேன். அந்த உரைகள் மிகவும் ஆர்வமூட்டுபவையாக இருந்தன. நாவல் மிகவும் நேரடித்தன்மை கொண்டதாக இருந்தது. இருநூறு பக்கங்கள் என்றாலும் ஒரு அமர்வில் வாசித்துவிடும் அளவு சுவாரஸ்யம் கொண்டது. மின்னங்காடி பதிப்பகம் வெளியீடு




‘மேன்ஷன்’ - பா. சரவணகுமரன்

கனகலிங்கத்திற்கு தினசரி ஒரு கட்டிங் அளவு குடிக்காவிடில் உறக்கம் வராது. அதற்காக அல்லாடுகிறார். அடுத்தவரைக் கெஞ்சுகிறார். அப்படிப் பட்டவருக்குப் போனஸ் பணமாக ரூபாய் ஐயாயிரம்  கிடைக்கிறது. அதை ஐம்பது நூறாக மாற்றிக் கொண்டு தனது மேன்ஷனை சுற்றிலும் வருவோர் போவோருக்குத் தந்துவிடுகிறார். மறுநாள் அவரிடம் கையிருப்பு இல்லை. மேன்ஷன் நாவலில் வரும் இந்தப் பாத்திரத்தைப் பார்த்தால் வாசகருக்கு அவர் யார் என பிடி கிட்டிவிடக் கூடும். அவர் எதையும் அளிக்கத் தயங்குபவர் இல்லை. ஆகவே கேட்கவும் தயங்கவில்லை. நாவலில் அவரது இறப்புச் செய்தியைப் பிறர் உரையாடும் இடம் நீட்டித்துச் சொல்லப்படுகறது. மேன்ஷன் நாவல் உருவாக்கும் மனநிலை என்பது பல்வேறு நபர்கள் மீது உண்டாகும் இந்தக் கரிசனம்தான் என்று சொல்லிவிடலாம்ஊரிலிருந்து நகருக்கு வந்து பிழைக்கலாம் என வருகின்ற அன்றைய இளைஞர்களின் வாழ்க்கையை அவர்கள் சந்திக்கும் துவக்க கால நண்பர்களே வடிவமைக்கிறார்கள்அன்றைய என்பதை கவனத்துடனே சொல்கிறேன். இன்று சிறு மழை பெய்தாலும் வாட்சப்பில் ஊருக்கு அழைக்கும் பெற்றோர்களைக் காண்கையில் அன்று இருந்த சுதந்திரம் எவ்வளவு பெரியது என எண்ண வைக்கிறது. தகவல் தொழில் நுட்பம் பெருகாத காலத்தில் உடனிருக்கும் நண்பர்கள் ஆதரவாக இருக்கிறார்கள். அவர்கள் மீது உருவாகும் நட்பு ஆயுள் வரை நீடிக்கிறது. அந்த சூழலை வேடிக்கை கதையாக சொல்பவர்கள் அல்லது இளக்காரமாக சொல்பவர்கள் அந்த மனிதர்களிடமிருந்து விலகி இருப்பவர்கள்.   இந்நாவல் அத்தகையோர் மீது ஒரு கரிசனத்தோடு எழுதப் பட்டிருப்பது. ஆகவே, என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்பும் கதாபாத்திரத்தை சுனாமி எடுத்துச் செல்வதைப் போல அனைவருக்குமான  பிற்கால சூழலையும் இது சொல்லிவைக்கிறது. அல்லது கற்பனை கொள்கிறது.

 


இப்போது PG என ஆகி Mobile phone ம் வந்து தனிமை / தனக்கான குழுவுடன் இணையத் தொடர்பில் இருத்தல் என்று    ஆகிவிட்டாலும் இருபது வருடங்கள் முன்பு வரை உயிர்ப்புடன் இருந்த மேன்ஷன் வாழ்க்கை என்பது எளிதில் விளங்கிக் கொள்ளத் தக்கதே. சென்னை வந்து  மேன்ஷனில் தங்கித் திருமணம் முடித்து வாழ்க்கையை அடுத்தகட்டம் எடுத்துச் சென்ற பலர் நாமறிந்த  மேன்ஷனில் உண்டு.  இது நடுத்தர வயதைக் கடந்த ஆதரவற்ற மனிதர்களைச்  சுற்றிய நாவல்.  சேவல் பண்ணை என்று அழைக்கப்படும் மேன்ஷனின் விதிமுறைகள் இலகுவானவை. முன்பின் தெரியாத நபர்களிடம் உருவாகும் நட்பு அனுசரணை அவர்கள் அளிக்கும் அறிவுரை ஆறுதல் எல்லாம்  அதை கடந்து வந்தோர்க்கு ஒரு நினைவேக்கமாக எஞ்சுகிறது.  

 

பிரபஞ்சன் ராஜமார்த்தாண்டன் ஆகியோரின் கட்டுரைகளின் வழி் இலக்கியத்தில் தனி இடம் பிடித்துவிட்ட திருவல்லிக்கேணி மேன்ஷனும் ரத்னா கஃபேயும் இதிலும் வருகின்றன.  அபுனைவில் இடம்பிடித்திருக்கும் மேன்ஷன் புனைவில் சிறுகதைகளில் இடம் பிடித்திருக்கிறது. கோபி கிருஷ்ணன் கீரனூர் ஜாகீர்ராஜா உள்ளிட்ட எழுத்தாளர்களின் சிறுகதைகளில் வருகிறது. பா.சிங்காரம் ஜி.நாகராஜன் பிரபஞ்சன் விட்டல்ராவ் ஆகியோர் மேன்ஷன் வாசிகளாக இருந்திருக்கின்றனர். ஒரு முழு நாவலில் மேன்ஷன் களமாக ஆவது  இப்போதுதான் நிகழ்கிறது என நான் கருதுகிறேன்.   இந்நாவலில் இலக்கிய வாசகர்கள் சற்று யோசித்தால் யூகித்துவிடக் கூடிய எழுத்தாளர்களும் கவிஞர்களும் பதிப்பாளர்களும் வருகிறார்கள். அவர்களில் ஒருவர் கலைச்சாதனை புரிந்தால் அது மற்றவரை எப்படித் துன்புறுத்தும் எப்படித் தூண்டிவிடும் என்பதை மிகவும் யதார்த்தத்தோடே பதிந்து இருக்கிறார்.  எல்லோரும் நம்முன் இருந்த இருக்கின்ற இலக்கிய ஆளுமைகள் என்று உணரும் போது அது உருவாக்கும் கனம் இந்நாவலை முக்கியமானதாக ஆக்குகிறது. புனைவில் வரும் அந்த எழுத்தாளர்களை அறியாமல் வாசிப்பவருக்குமே அந்த சிற்றிதழ் சூழல் சார்ந்த ஒரு புரிதலை எழுப்பும்படியான நடை உள்ளது.  அவர்கள் தங்களுக்குள் ஆறுதலாக இருக்கிறார்கள். அடித்துக் கொள்கிறார்கள். 

 


அவர்கள் தவிரவும் அடையாளமற்ற சாதாரண நபர்களும் வருகிறார்கள். அனைவரும் சேர்ந்து குடிக்கிறார்கள். பாடுகிறார்கள். அடித்துக் கொள்கிறார்கள்.  அந்த தலைமுறைக்கேயான சுய கழிவிரக்கம், சுய பச்சாதாபம், தயக்கம் கொண்ட கதை மாந்தர்கள்.  காதல் இலக்கியம், அரசியல், அதிகாரத்திற்கெதிரான போராட்டம், தமிழ்த் தேசியம் என பேசுகிறார்கள். குடிக்கிறார்கள்.  பாலியல் வறட்சி இருக்கிறது. காமப் புத்தகங்களாக வாசிக்கிறார்கள். வங்கக் கடலில் சுனாமி வருகிறது. போய்ப்  பார்க்கிறார்கள். பின் திரும்பி வந்து மீண்டும்  குடிக்கிறார்கள். காதல் இலக்கியம் என பேசுகிறார்கள்.  சமூகம்  அப்படித்தான் கடந்து சென்றது. 

 

மேன்ஷன் வாழ்க்கை இளம் வயதினருக்கு ஒரு கட்டற்ற  சுதந்திரத்தை அளிக்கும் இடம். ஆகவே மதுப்பழக்கம் உள்ளிட்டவற்றைப் பழகிக் கொள்ளுதல் என்பது  துவக்கத்தில் ஒரு கிளர்ச்சியையும் பின் ஒரு தினசரிப் பழக்கமாக ஆவதும் நிகழும். அந்தப் புள்ளியை நாவல் அழகாக தொட்டுச் செல்கிறது. ஆசிரியர்  அதை ஒரு கதைசொல்லியாக சொல்லிச் செல்லும் போது அவருடைய பார்வைகள் கவனிக்க வைக்கின்றன. திருப்பதியை சொல்லும் போது பூனைகளை அடிக்கடி குறிப்பிடும் இடம் நுட்பமானது. அதுபோல கண்ணகி சிலைக்குக் கீழே விலைமாதர்களுக்கும்  பாலியல் தொழிலில் இருக்கும் திருநங்கைகளுக்கும் நடக்கும் மோதல், தன்னை இளமையாகவே கருதிக் கொள்ளும்  எழுத்தாளர் 'வேடன் கிருஷ்ணன்' பாத்திரத்தின் மனநிலை ஆகியவையும் குறிப்பிடத் தக்கவையாக உள்ளன.  பிற பாத்திரங்களை நேரடியாகவே சொல்கிறார்.  அவற்றையும் இந்தக் குறிப்பிட்டப பாத்திரங்களைப் போல வடிவமைத்திருந்தால் நாவல் நினைவேக்கப் பிரதி என்பதைத்தாண்டிச் சென்றிருக்கும். இன்றும் மேன்ஷன் கலாசாரம் அவ்வளவாக இல்லை. பல இடங்கள் அடுக்ககங்களாக மாறுகின்றன. இருப்பினும் இன்னும் மேன்ஷன்வாசிகளாகத் தொடரும் பாத்திரங்கள் இறுதி அத்தியாயத்தில் வருகின்றன. அவர்களில் வேல்முருகனின் சித்தரிப்பு தனித்துவமானது. அவரது ஏக்கம் மற்றும் அலைக்கழிப்பு ஒரு சிறுகதைக்குரியது.

 

மேன்ஷன் என்கிற தலைப்பு ஒரு கதையை சொல்லிவிடுகிறது. அது ஒரு சித்திரத்தை  உருவாக்குகிறது. நாமும்.  அதையே உள்ளே வாசிக்கிறோம். மேன்ஷன் ஒரு மேடை அதில் குறுக்கும் நெடுக்குமாக சென்று  சந்தித்துக் கொள்ளும்  ஒவ்வொருவருக்கும் தனித்தனி கதை  உள்ளது. அந்த மேடை ஒளியில் அதன் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தைப் பதிவு செய்து அளித்திருக்கிறது இந்நாவல்.

 

No comments: