Wednesday, June 30, 2021

ஆள்தலும் அளத்தலும் - புத்தக கண்காட்சி புகைப்படங்கள்

நண்பர், எழுத்தாளர் அகரமுதல்வன் அவர்கள் ஒருங்கிணைப்பில்  புத்தக கண்காட்சி யாவரும் அரங்கில் தொகுப்பினை வெளியிட்ட போது


நன்றி எழுத்தாளர்கள்  கே.வி.ஜெயஸ்ரீ, அ .வெண்ணிலா, கே.வி.ஷைலஜா, அகரமுதல்வன் மற்றும் நண்பர் யோகேஸ்வரன் 





நண்பர், எழுத்தாளர் செல்வேந்திரன் 


நண்பர் யோகேஸ்வரன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார் 






ஆள்தலும் அளத்தலும் - பத்மஜா நாராயணனின் பதிவு

புத்தக கண்காட்சியை ஒட்டி என்னுடைய சிறுகதை தொகுப்பு 'ஆள்தலும் அளத்தலும்' வெளியானது. முதல் சிறுகதை தொகுப்பு வெளியானதும் இருக்கும் ஒருவித பதட்டம் எனக்கு இருந்தது. என் இயல்பு தெரிந்த நண்பர்களுக்கு கதைகள் பிடித்திருந்தாலும் பொதுவாக எப்படி கவனிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆள்தலும் அளத்தலும் சிறுகதை தொகுப்பு வெளியான சிலநாட்களில் தொகுப்பை படித்து என்னை தொலைபேசியில் அழைத்து கதைகளைக் குறித்து பாராட்டி பேசினார். நான் பத்மஜா நாராயணனை அவர்களின் மொழிபெயர்ப்பு புத்தகங்கள் வாயிலாக அறிந்திருந்தேன். ஆனால் நேரடி அறிமுகம் இல்லை. அவருடனான முதல் உரையாடலே உற்சாகமாக உணரச் செய்தது. அவருக்கு என் நன்றி.



facebbok-ல் பத்மஜா நாராயாணனின் பதிவு


புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களில் முதலில் படித்து முடித்த நூல். மனதிற்கு மிகவும் திருப்தி அளிக்கிறது. அழகான, எளிமையான நடை. காத்திரமான கருத்துகள். நேர்மையான எழுத்து. திரு காளி பிரசாத் மேலும் உயரங்கள் காண்பார் என்பதற்கு இது ஒரு சிறு சான்று. காளி பிரசாத் அவர்களுக்கும் வெளியிட்ட பதாகை பதிப்பகத்திற்கும் வாழ்த்துகள்

.

ஆள்தலும் அளத்தலும் குறித்து எழுத்தாளர் வாசு முருகவேல் அவர்களின் பதிவு

 

எழுத்தாளர் வாசு முருகவேல்

 

ஆள்தலும் அளத்தலும் - ஆர்.காளிப்ரஸாத்

எழுத்தாளர் ஆர்.காளிப்ரஸாத்தின் ஆள்தலும் அளத்தலும் சிறுகதை தொகுப்பின் பெரும்பாலான கதைகள் கடைநிலை ஊழியர்களின் (தொழிலாளர்களின்) உலகங்களை நம் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. அவர்கள் உலகத்தின் மேன்மையையும் - கீழ்மையையும் யதார்தத்தை மீறாமல் காட்சிபூர்வமாக காட்டுகிறது. ( லோயர் மிடில்கிளாஸ் லெவலில் இருந்து, கடைநிலை ஊழியர்களை நோக்கும் பார்வை..( தொழிலாளர்களுடன் கூடவும்/ ஒரு வகையில் சற்றுத் தள்ளியும் இருந்து நோக்கும் பார்வை.)
இதில் இடம்பெற்றுள்ள எந்தக் கதையிலும் அவர்கள் மீதான வலிந்து திணிக்கப்பட்ட ஒரு பரிதாபத்தை காண முடியவில்லை. அவர்களின் வாழ்வியல் அழகை எந்த இடத்திலும் கலைக்க முற்படவில்லை. இவ்வாறான தன்மைகள் இந்த கதைகளை சிறந்த இடத்திற்கு எடுத்துச் சென்றிருக்கின்றன.
ஆர்வலர் மற்றும் கரி இரண்டு கதைகளும் மேலே குறிப்பிட்ட கதைகளில் இருந்து மாறுபட்ட கதைகளாக என்னை சற்றுத் தீவிரமாகவே பாதித்தன. அது போல திருவண்ணாமலை என்ற கதையின் அங்கதத்தன்மை நன்றாக இருந்தது. அது வெறுமனே ஒரு அங்கதக் கதை என்று கடந்து போகக்கூடிய கதை அல்ல. பராசக்தி என்ற கடைசி கதை தரக்கூட தரிசனம், பராசக்தியை புரிந்தவர்களுக்கானது!.
முதல் கதையான பழனி என்ற கதைக்கும் மதிப்பு என்ற கதைக்கும் இடையில் சுற்றுகின்ற உலகம், மனிதர்களை எடை போடுவது என்பதை பற்றிய ஒரு விவாதத்தை நம்முள் ஏற்படுத்தக்கூடியது. இதிலும் பழனி என்ற கதை, கதை சொல்லல் முறையால் ஒரு படி முன்னே நிற்கிறது.
காளிப்ரஸாத்தின் கதைகள் சிலவற்றை படித்து முடிக்கும் போது, மீளவும் அந்த கதைக்குள் இடம்பெற்ற சில உரையாடல்களை தேடிச்சென்று படிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. உதாரணமாக மதிப்பு மற்றும் கரி என்ற கதைகள்.
எழுத்தாளர் ஹண்ஸ்டா சௌவேந்த்ர சேகர் அவர்களின் "ஆதிவாசிகள் இனிமேல் நடனமாட மாட்டார்கள்" என்ற மொழிபெயர்ப்பு சிறுகதை தொகுப்பை வாசித்த பிறகு எனக்குள் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருந்தது. அந்த வெற்றிடத்தை ஆர்.காளிப்ரஸாத்தின் ஆள்தலும் அளத்தலும் பூரணமாய் நிறைத்து விட்டது. இருவரின் நிலங்கள் வேறுபட்டவை என்ற போதிலும் இவர்களின் கதைகளின் ஆழத்தில் ஒற்றுமைகள் நிறைந்திருக்கின்றன. அவை எந்த மேல் பூச்சும் இல்லாத வாழ்க்கைகள். நாம் கண்டுணராத மனிதர்களின் (அக) உலகங்கள்.
புத்தகம் - ஆள்தலும் அளத்தலும்
எழுத்தாளர் - ஆர்.காளிப்ரஸாத்
பதிப்பகம் - யாவரும் - பதாகை
விலை - 140/=
https://www.be4books.com/product/%e0%ae%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/

ஆள்தலும் அளத்தலும் - சரவணன் மாணிக்கவாசகம்

 நன்றி:-சரவணன் மாணிக்கவாசகம்

 facebook ல் சரவணன் மாணிக்கவாசகம் அவர்கள் பதிவு 


சரவணன் மாணிக்கவாசகம்


ஆள்தலும் அளத்தலும் - ஆர்.காளிபிரசாத்:

ஆசிரியர் குறிப்பு:
சென்னையில் வசிக்கும் இவர் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புகளும் செய்து வருகிறார். தம்மம் தந்தவன் எனும் நாவல் இவரது மொழிபெயர்ப்பு. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு இது.
விடிவு கதைக்கருவில் பல கதைகள் வந்திருக்கின்றன. ஆனால் இவர் இதைச் சொல்லியவிதம் புதிது. நிஜவாழ்க்கையிலும் கூட கணவன் மனைவி அல்லாத இருவர் வெளியூர் செல்கிறார்கள். ஒன்றும் நடக்காதவரை ஒன்றுமில்லை. ஒருவர் இறந்தால் மற்றவர் என்ன செய்வது? இருவரின் வீட்டாரை எப்படி எதிர்கொள்வது! விளையாட்டுக்கள் வினையாவது இப்படித்தான். முதல் வரியிலிருந்து கடைசிவரி வரை பதற்றத்தை சிறிதும் குறைக்காமல் கொண்டு செல்லும் கதைசொல்லல்.
விடிவு மட்டுமல்ல பழனி, ஆர்வலர் கதைகளும் சொல்லிய விதத்தாலேயே நல்ல கதையாகி இருக்கிறது. சம்பவங்களையே பெரும்பாலும் இவர் கதைகளாக்கி இருக்கிறார். சம்பவங்களை கேட்பவர் இமைக்காமல் கேட்பது போல் சொல்லும் சரளமான மொழிநடை இவருக்கு.
திருவண்ணாமலையின் மறுபெயர் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். முழுக்கவே பகடியான கதை. வண்ணநிலவனின் மழைப்பயணமும் பூதம் கதையும் சொல்லும் விசயம் ஒன்றே ஆனால் சொல்லப்படும் விதத்தில் எவ்வளவு வித்தியாசங்கள்? கடைசிப்பத்தி புன்னகையை ஏற்படுத்துகிறது.
பழனி, ஸ்ரீஜி, பாபு எல்லோருமே முன்னேறினால் போதும், End justifies the means என்ற வகையில் இயங்குகிறார்கள். தார்மீக நெறிகளில் இவர்களுக்கு கவலையில்லை. இருதயம் அண்ணன் கூட வைத்துக்கொண்டே வஞ்சகம் பண்ணுகிறார். அப்பாவி என்றால் ஆள்தலும் அளத்தலும் கதையில் வரும் பெயரில்லாத கதைசொல்லி தான்.
பத்து கதைகள் கொண்ட தொகுப்பு இது. நான்கு வருடங்களுக்கு பத்து கதைகள் என்னும் போது குறைவாகவே எழுதியிருக்கிறார். கரி கதையின் முடிவில் நாடகத்தன்மை இருக்கிறது, மதிப்பு கதையில் ஐநூறு ஆயிரம் வெறும் காகிதம் என்று பொதுவாக எல்லோருக்கும் உள்ள பிரமை இவருக்கும் இருந்திருக்கிறது. இவை இரண்டையும் விட்டுப்பார்த்தால் கதைகள் எல்லாமே வித்தியாசமான கதைக்களங்களில் தனித்துவமான கதைசொல்லல். சற்றே அசோகமித்ரனின் சாயல் இருந்தபோதிலும் இவரிடம் ஒரு Unique writing style இருக்கிறது.
ஆள்தலும் அளத்தலும் போன்ற கதைகள் இவர் இரண்டு கைகளையும் தாராளமாக வீசி நடைபயிலும் களம். O .Henryயின் பாணியில் கதை இறுதியில் திருப்பம் என்பதில் இவருக்கு நம்பிக்கை இருக்கிறது. பத்து கதைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாமல் வித்தியாசமாக எழுதப்பட்டவை. மிகுந்த மனநிறைவை அளிக்கும் தொகுப்பு. இவர் தொடர்ந்து எழுத வேண்டும். மிகவும் நம்பிக்கையூட்டும் எழுத்தாளர்.
பிரதிக்கு:
பதாகை & யாவரும் வெளியீடு
90424 61472 & 98416 43380
முதல்பதிப்பு பிப்ரவரி 2021
விலை ரூ.140.
https://www.be4books.com/product/%e0%ae%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/

ஆள்தலும் அளத்தலும் - மதிப்புரை - மந்திரமூர்த்தி அழகு

facebook  ல் மந்திரமூர்த்தி அவர்களின் பதிவு. (மந்திரமூர்த்தி அவர்களின்  "வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்" facebbok  குழு வாயிலாக )


மந்திரமூர்த்தி




ஆள்தலும் அளத்தலும் & பிற கதைகள்- எழுத்தாளர் ஆர் காளிப்ரஸாத்

வெளியீடு: பதாகை & யாவரும் பப்ளிஷர்
முதல் பதிப்பு: பிப்ரவரி 2021
எழுத்தாளர் ஆர்.காளிப்ரஸாத் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி செய்கிறார். ஜெயமோகன் விஷ்ணுபுரம் வட்டத்தைச் சார்ந்த எழுத்தாளர். தமிழில் சிறுகதைகளை எழுதி வருபவர்களில் முக்கியமான கவனத்துக்கு உரியவர். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் புதிதாக இந்த ஆண்டு வெளியான ஆர்.காளிப்ரஸாத்தின் இந்தச் சிறுகதைத் தொகுப்பை வாசிக்கப் பரிந்துரை செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
தொகுப்பில் 10 சிறுகதைகள் இருக்கின்றன.
1. பழனி
2. ஆர்வலர்
3. விடிவு
4. திருவண்ணாமல
5. பூதம்
6.ஆள்தலும் அளத்தலும்
7. ஸ்ரீஜி
8. கரி
9.மதிப்பு
10.பராசக்தி
நூலின் முன்னுரையில் ஆர்.காளிப்ரஸாத் , "எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்களின் புகழ்பெற்ற வாசகம் ஒன்று உண்டு. 'எழுத்து என்பது எனக்குத் தவம் அல்ல; வேள்வியல்ல; பிரசவ வேதனை அல்ல; ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல; பேரும், புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் முயற்சி; என் சுயத்தைத் தேடும் முயற்சி!' என்று. இந்தத் தொகுப்பில் நானும் அதற்கான என் முதலடியை எடுத்து வைத்திருக்கிறேன்.
என்னுடைய கதைகளில் சிறுகதைக்கான தருணம் இருக்கிறதா என்று கவனிக்கிறேன். என் கதைகளின் வழியே நான் சொல்ல வருவது வெறும் அதிர்ச்சியோ அல்லது நகைச்சுவையோ மாத்திரம் அல்ல என்பதில் கவனமாக இருக்கிறேன். கதைகளை வாசிப்பவரை மகிழ்விக்கும் நோக்கமோ அல்லது அறிவுக் கண்ணைத் திறந்து வைக்கும் ஆவலோ இருந்ததில்லை. அனுபவங்கள், அறிதல்கள் என அனைத்தையும் கலைடாஸ்கோப்பில் போட்டுச் சுழற்றிச் சுழற்றிக் காட்டுவது போலத்தான் இவை வெளிப்பட்டிருகின்றன." என்று குறிப்பிடுகிறார். அவை உண்மை என்பதை இந்தக் கதைகள் அனைத்துமே நிரூபிக்கின்றன.
இந்தச் சிறுகதைத் தொகுப்புக்கு
அருமையான
அறிமுக உரையைத் தந்திருக்கிறார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள். அவர் தொகுப்பில் உள்ள ஆள்தலும் அளத்தலும், விடிவு, மதிப்பு, கரி ஆகிய 4 சிறுகதைகளைக் குறித்தும் ஆழமாக அலசி அவற்றைப் பெருமைப்படுத்தி இருக்கிறார். அவர் தனது அறிமுக உரையில் 'பெரும்பாலான இந்தக் கதைகள் நல்ல வாசிப்பனுபவம் வழங்குகின்றன. ஈர்ப்பான கூறுமொழி. சொந்த அனுபவங்களா அல்லது சாட்சியாக நின்றவையா என்று அனுமானிக்க முயல்வது வாசகனின் வேலை அல்ல. ஆனால் நம்பகத்தன்மைக்கு என்றொரு ஒரு தனியான வசீகரம் உண்டு.
மனத்தின் அவத்தைகள், தட்டழிவுகள், பிறழ்வுகள், கனவுநிலை உரைத்தல்கள், பிரமைகள் என்பன சிறுகதைக் கருப்பொருட்கள். சம்பவங்கள்,முரண்கள், குணச்சித்தரிப்புகள், வாழ்வியல் போராட்டங்கள் எனப் பிறிதொருவகை. என்ன வகையாயினும் மொழித்திறனிலும், செய்நேர்த்தியிலும், கூறு முறையிலும் இந்தச் சிறுகதைகள் எம்மை ஈர்க்கின்றன' என்று குறிப்பிடுகிறார்.
இன்றைய காலக்கட்ட நவீனச் சிறுகதைகளை அறிய விரும்புவோருக்கு இந்தத் தொகுப்பு சிறந்த அறிமுகமாக இருக்கும். ஒவ்வொரு கதையும் வாசகன் நுணுக்கமாக உணர்ந்து அறிய வேண்டிய நிலையில் எழுதப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு கதையும் அதற்குத் தேவையான மொழி நடையுடன், சொல்லும் பாங்குடன் இணைந்து உச்சமான இடத்தைப் பெறுகிறது.
தொகுப்பில் உள்ள முதல் கதை பழனி.
லாட்ஜில் எலக்ட்ரிகல் வேலை செய்யும் பழனி பல பித்தலாட்டங்களைச் செய்பவன். அதனை உடன் இருந்து பார்க்கும் அவனது நண்பன் பார்வையில் இந்தக் கதை சொல்லப்படுகிறது. பழனி விரும்பும் பெண்ணை மணம் செய்ய பழனியே அறியாமல் உதவி செய்கிறான் அவனது நண்பன். 15 ஆண்டுகள் சௌதி வெளி நாட்டில் வேலை செய்து திரும்பி வரும் நண்பன், உடன் வேலை செய்த நண்பர்களைக் குறிப்பாகப் பழனியைத் தேடுகிறான். பழனி தற்போது காண்டிராக்டராக தரமணியில் நல்ல நிலையில் இருப்பதை அறிகிறான். அப்போது சற்றுத் தொலைவில் ஒரு கன்றுக்குட்டி பசுவைத் தேடித் துள்ளித் துள்ளிச் சென்றது என்றளவில் இந்தக் கதையை நிறைவு செய்கிறார் காளிப்ரஸாத். அவர் இந்தக் கதையைச் சொல்லியிருக்கும் நடையும், மொழியும், இடையிடையே வரும் கேலி, கிண்டல்கள், நகைச்சுவையும், கதையின் எதிர்பாராத திருப்பங்களும், எதார்த்தமான கதையைச் சொல்லும் பாங்கும், வாசகன் இடையிடையே யூகித்து உணர்ந்து ரசிக்க வேண்டிய செய்திகளும் இந்தக் கதையை மேலான இடத்தில் நிறுத்துகின்றன.
இன்றைய எழுத்தாளர்களின் நவீனச் சிறுகதைகளை அறிய விரும்புவோர் அவசியம் வாசிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு ஆர்.காளிப்ரஸாத்தின் ஆள்தலும் அளத்தலும் சிறுகதைத் தொகுப்பு.
May be an image of text that says 'ஆள்தலும் அளத்தலும் பிற கதைகள் ஆர் காளிப்ரஸாத்'

Wednesday, May 12, 2021

நீ சரி பண்ணி வாழ்ந்த




வங்கித் தபாலின் முகவரி பகுதி போல கரும் சுருளுக்குள் முகம் மட்டும் பளீரிடுகிறது

கரிய போர்வைக்குள்ளிருந்து முகம் மட்டும் காட்டி தூங்கும் ஒரு  பெரிய குழந்தையின் முகம் போலவும் 

ஸ்ட்ரெக்சரை நிதானமா இழுங்க என்கிறார் ஆம்ஸ்ட்ராங் உடையணிந்த தகனமேடை பணியாளர் 

'ஹ்க்கும்! நிதானம்' என மோவாயை தோள்பட்டையில் இடித்துக்கொள்கிறாய்

ஏன்? நிதானமாதான் இழுக்கறேன் என்கிறேன்

சும்மா கதைவுடாதடா
நான் பாத்துண்டுதான் இருந்தேன்
ஆத்தை வுட்டு வெளிய வந்தவுடனே சிகரெட் வாங்கலாமான்னு கடகாரன் கிட்ட வரைக்கும் போய்ட்டு  பைக்ல போனா போலீஸ் புடிக்குதான்னு ஒப்புக்கு கேட்ட

ரெண்டு பேரு போன் பண்ணிணா..
 அப்படியே ஹெல்மேட்ல போன வுட்டுண்டு பேசற
அப்பறந்தான் வண்டிய நிறுத்தற
திரும்ப வண்டிய எடுக்கறப்போ
சைட்ஸ்டாண்ட எடுக்கல
எவனோ திட்னப்போ அவன்கிட்ட சாரின்னு சொல்லிட்டு ஸ்டாண்ட் எடுக்குற

இருந்தாலும் அது மேனர்ஸ் இல்லையா என்கிறேன்


எப்பேலேந்து சொல்லிண்டிருக்கேன் பதறாம இருடான்னு...
ரெண்டு கொழந்தைங்க ஆயிடுத்து
இன்னும் ஆத்த விட்டு வெளீல வந்தா புக்காத்துக்கு வந்த புதுப்பொண்ணு  மாதிரியே மலங்க மலங்க முழிக்கிற

எல்லாம் சரியாகிடும் சித்தி என்கிறேன்

ஆமாம்..நீ சரி பண்ணி வாழ்ந்த.. என இருகைகளால் என் முகத்தை வழித்து திருஷ்டி கழிக்கிறாய்

சிமெண்ட் தரையில் கடகடவென ஏறுகிறது ஸ்ட்ரெக்சர்

என் கொழந்தைக்கு எவ்ளோ திருஷ்டி பாத்தேளா என்கிறாய் சுற்றிவரப் பெருமையாய் பார்த்து

Friday, May 7, 2021

இடைவெளிகளை நிரப்பும் எழுத்து

எழுத்தாளர் வாசு முருகவேல் அவர்களின் நாவல்கள் குறித்து எழுதிய கட்டுரை, அகழ் இணைய இதழில் வெளியானது 

 



வாசு முருகவேலின் நான்கு புத்தகங்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒன்று அவர் ‘ஈழத்தமிழில்’ எழுதிய ‘ஜெப்னா பேக்கரி’ நாவலின்  ‘தமிழகத் தமிழ்’ பதிப்பு. இரண்டாம் பதிப்பு இவ்வாறு திருத்தி வெளியிடப்பட்டிருக்கிறது. அதை மொழிபெயர்ப்பு என்று சொல்ல முடியாது. அந்த அளவு நமது மொழிப்புலமையின் நிலைமை இன்னும் மோசமாகிவிடவில்லை. அவ்விரண்டினையும் ஒரே நாவல் என்று கொண்டால் மொத்தம் மூன்று நாவல்கள் வெளியாகியுள்ளன.


 ஜெப்னா பேக்கரி 


நம் தலைமுறையில்  நேராகக் கண்ட, அதில் தனக்கான சார்பு நிலை கொண்ட போரில் ஒன்று தமிழீழ விடுதலைப்போர். இதில் விடுதலைப் புலிகள்ஆதரவு / எதிர்ப்பு என இரு மனநிலைகள் இங்கு உருவாயின. அவற்றில் புலிகளுக்கு ஆதரவான மனநிலையில் இருப்பவரிடம் எதிர்த்தரப்பினரால்  இரு கேள்விகள் தவறாது கேட்கப்படும். அதில் ஒன்று முன்னாள் இந்தியப் பிரதமர் படுகொலை செய்யப்பட நிகழ்வு. அதைச் சற்றே பெருமிதத்துடன் எதிர் கொள்பவர்கள்கூட அடுத்த கேள்வியான ‘யாழ் வெளியேற்றம்’ பற்றி கேள்வி வந்தால் சற்றுப் பெருமிதம் குலைந்துதான் போவார்கள். அந்த அளவிற்கு ஒரு கரும்புள்ளி அந்த நிகழ்வு.


கடற்கரை ஓரமாக வேறு வேலையாக நடந்துபோகிறவர்கள் சற்று நின்று, கடலில் கால் நனைத்துப் போகலாம் என்று அலையில் ஆடிச் செல்வதுண்டு. அதுபோல யுத்தத்தில் யாரும் தலையைக் கொடுத்துவிட்டு வருவோம் என்று தானாகப் போய் கொடுக்கப் போவதில்லை. அது இதிகாச யுத்தமானாலும் நிகழ்கால யுத்தமானாலும் அதில் ஈடுபட ஒரு  ‘மறுகேள்வி கேட்காத” அர்ப்பணிப்புத் தேவையாகிறது. முழு அர்ப்பணிப்பு இல்லாமல் வெறுமனே சென்று மடிய யாரும் விரும்புவதில்லை.


இந்த விஸ்வாசம் அனைத்துத் தரப்பிற்கும்தான் இருக்கிறது. சொல்லப்போனால் போர் அதனால்தான் எழுகிறது.  ஆனால்  முழுமுதற் விஸ்வாசம் என்பது மூர்க்கமான ஒன்று. அது எதிர்த் தரப்பின் நியாயங்களைக் கருத்தில் கொள்வதில்லை.   ‘ஸ்ரீலங்கா இஸ்லாமியர்கள் காங்கிரஸ்’ உருவானதும், அதைத் தொடர்ந்து ஒருவேளை தமிழீழ தனி அரசு அமைத்தால் அதில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையாக ஆவார்கள் என்று கருத்து உருவானதும், ஆகவே இருதரப்பிலும் பதற்றம் உண்டானதும், அதில் சிங்கள அரசு குளிர் காய்ந்ததும், இறுதியாக ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமிய மக்கள் சொந்த நாட்டிலேயே வீடு, நிலம், பொருள் ஆகியவற்றை இழந்து அகதியாக இடம் மாறியதும், இன்றுவரை அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் சொந்தமண்ணை மிதிக்காமல் உள்நாட்டிலேயே வேறு வேறு இடங்களில் வாழ்கிறார்கள் என்பதும்,  அவர்களில் 90% பேர் இன்னும் தன் ஊருக்கு வராமலே வெளியேதான் வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கின்றனர் என்பதும் இந்த யாழ்  வெளியேற்றத்தின் விளைவு. இது குறித்த தகவல்கள் விக்கிபீடியா உள்ளிட்ட தளங்களில் கிடைக்கின்றன.  சிங்கள திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதானகேயின் ’august sun’ படம் இஸ்லாமிய வெளியேற்றம் குறித்துப் பதிவு செய்த முக்கியமான படைப்பு. மௌலானா முஹாஜித் எழுதிய ‘முஸ்லிம்கள் படுகொலை’ புத்தகமும் அச்சம்பவத்தின் ஒட்டுமொத்த அரசியல் பின்னணியைக் கூறுகிறது. இவை இரண்டிலும் யாழ் வெளியேற்றம் மையம் அல்ல. ஆனால் அன்றைய சூழ்நிலையை அறிய உதவக்கூடும்.


இந்தப் பின்னணியின் சூழலில்தான் வாசு முருகவேல் தனது  முதல் நாவலான ஜாப்னா பேக்கரியை  எழுதுகிறார். இதில்   அரசியல் ரீதியாக ஆளும் சிங்கள அரசு தவிர்த்து இரு தரப்புகள் உள்ளன. ஒன்று, ஈழத்தில் சிறுபான்மையினராகக் கருத்தப்பட்டு உரிமை மறுக்கப்பட்டுப் போராடும் தமிழர்கள். இரண்டாவது தமிழர்களில் தாம் சிறுபான்மையாகக் ஆகிவிடுவோமோ என அச்சத்தில் வாழும் சில இஸ்லாமியர்கள். இவர்களுக்கிடையே எந்த முடிவும் எடுக்கவியலாமல் கால ஓட்டத்தின்படி வாழும் இருதரப்பு அப்பாவியான மக்கள்.  இவர்கள்தான் பெரும்பான்மையினர்.


வாசுமுருகவேல் நடை இயல்பாகவே சுருங்கக் கூறும் வகையினைச் சார்ந்தது.  றஜீவன், அரைமண்டை போன்ற மனிதர்களை அறிமுகப்படுத்தவோ அவர்களின் சிந்தனைப் போக்கை உணர்த்தவோ பெரும்  வர்ணனைகளை எடுத்துக்கொள்வதில்லை. அஜ்மல் தனது தந்தைமீது வெறுப்புடன் வளர்ந்தவன்.  அன்று  தன் தந்தையின் மரணித்த உடல் கிடத்தப்பட்டிருப்பதைப் பார்க்கிறான். எப்பொழுதும் அதிரடியாகச் செயல்படும் நபர்  அடக்கமாக இருப்பதைப் பார்த்து “எப்பேர்ப்பட்ட ஒரு அனுபவத்தை இழக்கப் பார்த்திருக்கிறோம்’ என்று கருதி நிற்பதாகக் குறிப்பிடுகிறார். அந்த இடத்தை மெல்ல வர்ணிக்கத் துவங்குகிறார். மரண வீட்டில் சோகத்தை உண்டாக்குவதற்கே ஆட்கள் தேவைப்பட்டனர். அதுவே பெரிய சோகம் என்று சொல்லியபடி செல்கிறது நாவல். இந்தக் கச்சித  வர்ணனை சில சொற்களிலேயே அந்த இல்லத்தின் நிலை, அவர்களுக்குள் இருந்த உறவுச் சிக்கல் என எல்லாவற்றையும் காட்டிவிடுகிறது


ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் நிகழ்ந்த இராமாயண மஹாபாரதப்  போர்களை உருவாக்கிய நிர்பந்தமும் அதில் பல உட்குழுவிற்கு இருந்த அறமின்மையும் தற்காலத்தில் உரைக்கப்பட்டால்கூட அது சார்ந்து சர்ச்சைகள் உருவாக்கி வருகின்றன. அந்தக் காலத்தில் நாம் வெற்றியாக / தோல்வியாக  கண்ட ஒன்றினை  விமர்சித்து தற்காலத்தில் எழுதினால் கூட சித்தாந்த ரீதியில் பல இடர்களைக் களைய வேண்டியிருக்கிறது. அடையாளங்களைச் சுமக்க வேண்டியிருக்கிறது. அப்படியிருக்கையில் நிகழ்கால யுத்தத்தின் கூறுகளை எழுதும் ஒருவர் இன்னும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. கதையோட்டத்தில் புலிகளின் தரப்பா இஸ்லாமியர்களின் தரப்பா எது சரியானது என்கிற கேள்விக்கோ தீர்ப்பிற்கோ கதாசிரியர் சொல்லவில்லை. ஆனால் சின்னஞ்சிறுவர் முதல் அனைவருக்கும் அந்த பேக்கரிமீது ஒரு ஒவ்வாமை உருவானது, கசப்பாக மாறியது ஆகியவற்றை அரவிந்தன் என்ற சிறுவனின் உடல்மொழி வாயிலாகப் புரிந்துகொள்ள முடிகிறது.  அதேபோல நசீர் தன்னுடைய ரேடியோ உடைபடும் தருணத்தில் அழுகையை நிறுத்தி வெறித்துப் பார்ப்பது மற்றோர் உதாரணம். அதை நேர்த்தியாக் கையாண்டிருக்கிறார். எப்படியானாலும் நாம் யார் தரப்பில் நிற்கிறோம் என்பது கூர்ந்து கவனிக்கப்படும்.  நம் சாய்வு யார் தரப்பில் இருக்கிறது என்பது நாவலில் வெளிப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் இருக்கும்.  அவ்விதத்தில்  உணர்ச்சிக்கு அப்பாற்பட்டு நின்று சுருங்கக் கூறும் இவரது நடை  அதைத் தவிர்த்துச் சம்பவங்களைத் தொகுத்துக்கொள்ள உதவுகிறது.  மகாபாரதத்தில் துரியோதனன் சார்பாகப் பேசலாம். அதற்காக வாரணாவத்தை  நியாயப்படுத்தக் கூடாது அதுதான் அடிப்படை அறம். அந்தப் புரிந்துணர்வு நாவலாசிரியருக்கும் இருக்கிறது. நாவல், அந்தச் சூழல் குறித்த ஊகங்களையும் கிசுகிசுப் பாணியில்  சொல்லிச் செல்கிறது. மேலும் ஆசிரியர் சொல்வதையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ள  இலக்கிய வாசகர்  ஆறாம் வகுப்பு மாணவர் அல்லர். அந்த வகையில் சூழலை  எவ்வாறு உள்வாங்கிக் கொள்கிறோம் என்பதில் வாசகரின் பங்கும் உள்ளது. வாசகரின் மனச்சாய்வும்  உள்ளது.  


ஒருபுறம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம், மறுபுறம் மதரீதியாக அதை அணுகிப் போராட்டத்தைக் குழப்பிவிடும் ஆளும் அரசின் சாணக்கியம். மறுபுறம் இதனால் அல்லாடும் சாமானியர்கள். இதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், இதற்கிடையே, இதைப் பேசித் தீர்க்க நிகழ்ந்த முயற்சிகள் என்னென்ன என்பதை ஆசிரியர் விளக்கியிருக்கலாம். ஏன் வலுக்கட்டாயமாக இந்த உடனடி வெளியேற்றம் நிகழ்ந்தது என்பதை இன்னும் விளக்கமாகப் புனைவில் பொருத்திப் பார்த்திருக்கலாம்.    


ஒருசில இயக்கத்தினர் செய்த தவறுக்கு ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் அழிக்கத் துணியலாமா என்ற கேள்வி ஸ்ரீலங்கா அரசை நோக்கிக் கேட்கப்படும். அந்தக் கேள்வியையே இறுதியில் இயக்கத்தினரை நோக்கிக் கேட்கத் தூண்டுகிறது நாவலின் இறுதி அத்தியாயம்.. ஒருசிலரின் செயல்பாடுகள் மீதான ஐயத்திலா இத்தனை மக்களை வெளியேற்றினீர்? அவர்களிடம் வழிப்பறியும் செய்தீர்? பலரின் உள்ளே இருந்த குழந்தைமையைப் போட்டு உடைத்தீர்? என்ற கேள்வியை எழுப்பிய வண்ணம் நிறைவடைகிறது நாவல்.






கலாதீபம் லொட்ஜ்


முந்தைய நாவலான ’ஜப்னா பேக்கரி’யில் ஒரு வரி வரும், ” ’’சிநேகிதம்கூட பிரச்சனையாக மாறும் துயரம் யாருக்கும் நிகழக் கூடாது” என.. இந்த இரண்டாம் நாவல் ’கலாதீபம் லொட்ஜி’ன் மையமாக இருப்பது அந்தப் புள்ளிதான்.


ஒரு போராளிப் பெண்ணுடன் இருமுறை பேசிய இளைஞன், ஏதும் அறியாத  அப்பாவி மனநிலை கொண்டவன்.   போலீசின் சித்திரவதைக்   கூடங்களில் சிக்கிச் சிதறிப்போகும் அவனது  வாழ்க்கை. ஒருவர் ஈழத்திலிருந்து கிளம்பி அகதியாகவோ அல்லது உறவினரைச் சந்திக்கவோ அயல்நாட்டிற்குச் சென்றுசேர்வது என்பதிலுள்ள சிக்கல்களைக் களமாகக் கொண்ட நாவல், அதிகம் சொல்லப்படாத கொழும்பு நகர்ப்புற வாழ்வைச் சொல்லிப் போகிறது. மலையகம், ஈழம் சார்ந்த கதைகளைப் படித்திருந்தாலும் நகர்ப்புற வாழ்வின் அச்சங்களும்  நம்பிக்கைகளும் கொண்ட நாவல் இது. அயல்நாடு செல்லும் வழியில் கொழும்பில் லாட்ஜில் தங்க நேரிடும் குடும்பமும் அவர்களைச் சுற்றியுள்ள பாத்திரங்களின் அலைச்சலும் சொல்லப்படுகிறது.


அயல்நாடு செல்பவர்கள் தங்கியிருக்கும் லாட்ஜின் அறைக்கு எப்பொழுது  வேண்டுமானாலும் உறவினரிடமிருந்து  அழைப்பு வரலாம். அதை வந்து சொல்வதற்கென ஒருவர் இருக்கிறார். அவரிடம் நலம் விசாரிக்காமல் யாரும் செல்வதில்லை. அது ஒரு கிரக உறவுபோல.  கிரஹாம்பெல் உறவு என்றும் சொல்லலாம் என்று அறிமுகப்படுத்தும் சரளமான நடை இதிலும் உண்டு.


ஈழத்தில் அரசியல் கடசிகள், அரசாங்க அதிகாரிகளின் லஞ்ச  லாவண்யங்கள், சிறுநீர் சோதனையில் நோய் இல்லை எனக்காட்ட  நிகழும் தில்லுமுல்லு என அனைத்தையும் முந்தைய நாவல் போலவே சுருங்கச் சொல்லியே விளக்கிவிடுகிறார்.  தலைநகரம்,  எல்லா தலைநகரம்போல மொழி இனம் குறித்த பாகுபாடு ஏதும் இன்றித்தான் இருக்கிறது. சந்திரனிடம் பழக்கமாகும் அபயசேகர  ஒரு பரிமாணத்தைக் காட்டினால், சிங்களவர்களே பரவாயில்லை என்கிற அளவில் தமிழர்களிடம் கறாராக நடந்துகொள்ளும் தமிழர் மங்கையற்கரசி மற்றோரு பரிமாணம்.  வெளிநாடு போகும் வழியில்  லாட்ஜில் தங்கியிருக்கும் தாரிணி, கொழும்புஆன்ரீ ( ஆண்ட்டி) யின் மகனைக் கண்டதேயில்லை. அவன் சிறையில் இருக்கிறான். அவள் அறிந்ததெல்லாம் அவன் அம்மாவுடனான உரையாடல் வழிதான். இறுதியில் தன மகனைக் காணச்செல்லும் அம்மாவிடம் அவனுக்கான காதல் கடிதத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டுத் தன் தந்தை, தம்பியுடன் வெளிநாடு கிளம்புகிறாள் தாரிணி. மண்ணை விட்டு விலகிச் செல்லும் மனிதர்களுக்கு அந்த மண்ணின் மீதான பற்றும் அதற்காகப் போராடும் மனிதர்கள் மீதான அன்பும் நாவலில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை.


புத்திரன்


மண்ணை விட்டு விலகிச் செல்லும் மனிதர்களுக்கு அந்த மண்ணின் மீதான பற்று முந்தைய நாவலில் சொல்லப்பட்டதுபோல தன் மக்களைப் பிரிந்த தாய்மண்ணின் ஏக்கம்தான் புத்திரன் நாவல். சுந்தரி என்பது அழகானவள் என்ற பொருள் கொண்டது. நாவலின் நாயகி பெயர் அது. அதை அந்த மண்ணிற்கான குறியீடாகவும் கொள்ளலாம். 


கொரோனா காலத்தில் அனைவரும் தன் சொந்த ஊருக்குத் திரும்ப, புலம்பெயர்  வாழ்வில் அங்கு செல்லமுடியாத   ஏக்கத்தை எழுத்து வழியாக ஆசிரியர் தீர்த்துக்கொண்ட நாவல் எனலாம். மூன்று நாவல்களில் அதிகம் உணர்ச்சிவசப்படும் தருணங்கள் கொண்ட  நாவலாகவும் இது உள்ளது. தன் சிறுபிராயத்தை அசைபோடும் நினைவுகள் நிறைந்த சில நாவல்கள் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களால் எழுதப்பட்டுள்ளது. இது அந்த வரிசையில் சென்று அமர்கிறது.


நயினாதீவு மக்களின் வாழ்க்கையும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கிடந்து அல்லாடும் வாழ்க்கையும் உரைக்கப்படுகிறது. ஒருவிதத்தில் முந்தைய நாவல்களில் உள்ள ‘தள்ளி நின்று பார்க்கும்’ தன்மையை விட்டுவிட்டு நம்மையும் உணர்ச்சிக்குள் இழுத்துவிடுகிறது எழுத்து. அதனாலேயே கதாசிரியரின் மற்ற இரு நாவல்களிலிருந்து வேறுபட்டிருக்கிறது . வாசு முருகவேலின் படைப்புலகில் நுழைய விரும்புபவர்கள் இதிலிருந்து துவங்கலாம். 


மூன்று நாவல்களிலும் பொதுவாக இருப்பது எள்ளல் நிறைந்த நடையும் ஏனைய ஈழ நாவல்களில்  அதிகம் உரைக்கப்படாத இடங்களைத் தொட்டு் நிரப்பும் உள்ளடக்கமும் ஆகும். அல்லது அதிக முக்கியத்துவம் இல்லாதுபோன இடங்களை நோக்கி ஒளியைப் பாய்ச்சுதல் என்றும்  சொல்லலாம். புத்திரன் நாவலில் திருவெம்பாவை சொல்ல அந்த முழுக் கிராமமும்  தயாராவது ஒரு குறிப்பிடத்தக்க இளம்பிராய  நிகழ்வு. நாஸ்டால்ஜியா என்பது நல்ல வாழ்க்கை வாழ்ந்தவருக்கே சுகமான ஒன்று. அகதியாக அலைக்கழிக்கப்பட்டவருக்கு அல்ல என்பதும் உண்மை.  முதலில் மனுஷன் போனான். பின் மகன் போனான். கடைசியாக மண்ணும் போய்விட்டது என்று ஒருத்தி காரி உமிழ்வாள். அனைத்தையும் செரித்துக்கொண்ட மண் அதையும் செரித்துக்கொண்டது என்ற வரி முதல் நாவலில் ஒரு வர்ணனையில் வரும். அந்த வாழ்க்கை பாரத்தை எளிய விவரிப்பின் மூலம் கடத்துகின்றன இவரது நாவல்கள். பொதுவாக குழந்தைகளே முக்கிய கதாபாத்திரமாகவும், சம்பவங்கள் குழந்தைகளின் சிறார்களின் பார்வையிலும் உரைக்கப்படுவது இவர் நாவலின் முக்கிய அம்சம். ஈழ அரசியல், சமூக அவலங்களைப் பொறுத்தமட்டில் தமிழக மக்களின் புரிந்துணர்வு ஒரு குழந்தைக்கு இணையானதுதான். இந்த நாவல்களில் வரும் குழந்தைகளின் உள்ளம், அங்கு நிகழும் சம்பவங்களைக் கண்டு  மெல்ல முதிர்ச்சி அடைவதைப் போலவே சில புரிதல்களை நோக்கி வாசகர்களை இவை செலுத்துகின்றன.  எங்கோ பிறந்து உள்நாட்டிலோ அயல்நாட்டிலோ அலைக்கழிக்கப்படும் மக்களின் வாழ்வை அனைத்து ஈழ எழுத்தாளர்களும் உரைத்துள்ளனர். அவை எதையும் வாசிக்காதவர்கள் வாசு முருகவேலிடமிருந்து துவங்கலாம்.  அவை அனைத்தையும் வாசித்தோர் அந்தப் பெரும் பயணத்தில் சொல்லாமல் விட்டுப்போன  இடைவெளிகளை வாசு முருகவேலின் வழியாக அறிந்துகொள்ளலாம்.

ஆள்தலும் அளத்தலும்: செல்லும் தூரத்தை சுட்டும் சாதனை

ஆள்தலும் அளத்தலும் சிறுகதை தொகுப்பு குறித்து  அருணாசலம் மகாராஜன் வல்லினம் இதழில் எழுதிய மதிப்புரை:-




ஆள்தலும் அளத்தலும்: செல்லும் தூரத்தை சுட்டும் சாதனை 

    “அந்தக் கணம் என்றுமே என் நினைவில் இருந்து மறையாது… ஒரு கணத்திலேயே அது என்னவென்று புரிந்தது… ஆனால் அந்த ஒரு கணத்துக்குள் அது ஆயிரம் வடிவம் காட்டியது. முதலில் ஊரின் மச்சு வீட்டு வாசலில் இருந்த கரும் திண்ணையின் நினைவு வந்தது. பின் ஊர்க்காவல் பெரியாச்சி அம்மனின் விரித்த சடை ஞாபகம் வந்தது. ஒரு பெரும் அங்காளம்… அல்லது பெரும் பத்தாயம்… ஒருநாள் இரவில் கண்ட கோரை ஆறு… கார்மேகம்… அல்லது காரிருள்… அல்லது ஏதுமற்ற வெறுமை… அமாவாசை இரவு… சூனியம்பாங்களே அது இதுதானா… நட்சத்திரங்களாய் கண்கள்… எல்லாம் அறிந்தவன் போலப் புன்னகை.”


நண்பரும், தீவிர இலக்கிய வாசகருமான காளிபிரசாத் என்னுள் எழுத்தாளராக நுழைந்தது இவ்வரிகள் ஊடாகத்தான். ஒரு எழுத்தாளரின் மிகப் பெரிய சவால் என்பதே சொல்லாக மாற்ற இயலாத கணங்களை வாக்கியமாக்கி, அதன் பின்னும் அக்கணம் தந்த உணர்வுநிலையை வாசகனிடம் குன்றாமல், குறையாமல் கடத்துவதே. ஜெயமோகன் காவிய ஆசிரியராகவும், தல்ஸ்தோய், தஸ்தாவேஸ்கி துவங்கி நாஞ்சில்நாடன் போன்றோர் ஏன் பேரிலக்கியவாதிகளாகவும் (மாஸ்டர்ஸ்) கொண்டாடப் படுகிறார்கள் என்றால் அவர்கள் இச்சவாலை அநாயாசமாகக் கடந்தவர்கள் என்பதாலும் தான். ஒவ்வொரு எழுத்தாளரும் தனக்குத் தானே இலக்கிட்டு, எட்டி, கடந்து, புது இலக்கு உருவாக்கி, அதையும் கடந்து என ஆடும் ஆடலின் முக்கியமான சவால் இது. ஏனெனில் எழுத்தின் ஊர்தியான மொழியின் மேல் ஒரு எழுத்தாளனின் ஆளுமை இரண்டறக் கலக்கும் இடம் இது. ஒரு எழுத்தாளன் தன்னளவில் முழுமையாகும் முதல் படி என்பது அவனுக்கே உரித்தான ஒரு மொழிபை, தன் அகத்தில் ஓடும் மொழிக்கு மிக அருகில் இருக்கும்படியான ஒரு மொழிபைக் கண்டடைவதே. அகமொழிக்கும், வெளிப்பாட்டு மொழிபுக்குமான இடைவெளி குறையக் குறைய எழுத்தாளன் இலக்கியவாதியாகவும், பேரிலக்கியவாதியாகவும், காவிய ஆசிரியனாகவும் மலர முடியும்.


முதல் தொகுப்பிலேயே ஒரு எழுத்தாளரிடம் இதை எதிர்பார்ப்பது என்பது சற்று அதீதம் தான். ஆனால் அதை நோக்கிய பயணம் அந்த எழுத்தாளருக்குச் சாத்தியமா என்பதை முதல் தொகுப்பு காட்டிக் கொடுத்துவிடும். அவ்வகையில் காளிபிரசாத்தின் மேற்கண்ட வரிகள் அவர் அச்சவாலை ஏற்கக் கூடியவர்தான் என்பதற்கு கட்டியம் கூறுகின்றன. மிகச் சரியாகத் தொகுப்பின் தலைமைக் கதையாக அவர் தேர்ந்தெடுத்த ‘ஆள்தலும் அளத்தலும்’ கதையில் தான் இவ்வரிகள் வருகின்றன. சந்தேகமே இல்லாமல் இலக்கியமாகும் தகுதி கொண்ட கதை தான் அது.


பெரும்பாலும் மீண்டும் மீண்டும் கேட்கப்படும் ஒரு கேள்வி எதை வைத்து ஒரு கதை இலக்கியமென்றும், அல்லவென்றும் ஆகிறது என்பது. உண்மையில் இது ஒரு அடிப்படையான கேள்வி. பொதுவாக எந்தவொரு அடிப்படையான கேள்விக்கான பதிலைப் போல இதன் பதிலும் மிக எளிமையானதே. ஒரு படைப்பு, சிறுகதை, கவிதை, நாவல் என எந்த வடிவமாகக் இருந்தாலும், வாழ்க்கையைப் பேசும் என்றால் அது இலக்கியம். மிக நேரடியான, எளிமையான பதில். எப்படி ஒரு படைப்பில் வாழ்க்கை இருக்கிறது என்பதை அறியலாம்? அதற்கு நீங்கள் வாசகராக வேண்டும். வாசிக்கையில் அதில் எழுந்து வரும் தருணங்களில், அதன் உணர்வு நிலைகளில் உங்களால் ஈடுபடமுடிந்தால் அப்படைப்பில் வாழ்க்கை இருக்கிறது. அது நீங்கள் அறிந்த வாழ்க்கையாகத் தான் இருக்க வேண்டும் என்பதல்ல. முற்றிலும் புதிய நிலத்தின், புதிய வாழ்வாகக் கூட இருக்கலாம். ஆனால் அது மெய்யான சித்திரத்தைத் தருகிறதா அல்லது பொதுவில் சமைக்கப்பட்டிருக்கும் கருத்துநிலைகளில் இருந்து உருவாக்கி எடுக்கப்பட்ட ஒரு கற்பனையை முன்வைக்கிறதா என்பதில் இருக்கிறது இந்த வேறுபாடு. எப்படி இந்த வேறுபாட்டை அறிவது? அதற்கு வாசகராக நீங்கள் உங்கள் உள்ளுணர்வையும், நுண்ணுணர்வையும் தான் நம்ப வேண்டும். இலக்கிய விமர்சனங்கள், பரிந்துரைகள் ஓரெல்லை வரை உதவும். அதுவும் துவக்க நிலை வாசகர்களுக்கு மட்டுமே. அதன் பிறகு வாசகன் என்பவனும் தனியனே, எழுத்தாளனைப் போலவே!


வெறுமனே வாழ்வை மட்டுமே பேசுபவற்றை மெல்லிலக்கியம் என வரையறுக்கலாம். அவை பேசும் வாழ்வு மெய்யானதாக இருப்பதால் மட்டுமே அவை இத்தகுதியை அடைகின்றன. ஆனால் அது இலக்கியத்தின் வெளியில்தான் இருக்கிறது என்பதை வாசகர்கள் மறந்துவிடக் கூடாது. அப்படிப் பார்த்தால் இத்தொகுப்பின் அனைத்துக் கதைகளிலுமே வாழ்க்கை என்பது இருக்கிறது. பெரும்பாலான வாசகர்களுக்கு அறிமுகம் இல்லாத மின்னியல் தொழிலாளர்களின் வாழ்வு. பழனி, திருவண்ணாமலை, கரி, மதிப்பு, பராசக்தி போன்ற கதைகள். அப்படி ஒரு புதிய களத்தைத் தேர்ந்தெடுத்ததே இக்கதைகளுக்கு ஒரு வாசிக்கும் ஆர்வத்தைத் தந்துவிடுகின்றன. எனது வாசிப்பில் ‘மதிப்பு’ கதையே இவற்றில் சிறப்பானது. உண்மையில் தலைப்பால் மட்டுமே இக்கதை தன் உச்சத்தை வாசகருக்குக் கடத்துகிறது. அதை விட முக்கியம் இக்கதை யாருடைய தரப்பையும் எடுக்கவில்லை. நல்ல சிறுகதைக்கான படைப்பமைதி கூடிய கதை இது. மாறாக ‘கரி’, அதன் தலைப்பாலேயே அது சென்றடைய வேண்டிய உயரத்தை எட்டாமல் போன கதை ஆகிறது.


சிறுகதை என்பது முடிந்த அளவு ஒரு மையப்படிமத்தை முன்வைத்து நகர வேண்டியது. இக்கதையில் ஒரு நிகழ்வு இரு வேறு மனிதர்களிடம் என்ன வகை மாற்றங்களை நிகழ்த்துகிறது என்பதைப் பற்றி பேசுகிறது. அவ்விரு மனிதர்களும் வெவ்வேறு வகையில் அந்த நிகழ்வில் இருந்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்நிகழ்வில் பங்கேற்ற அப்பெண் எந்த சலனமும், மாற்றமும் இன்றி அப்படியே தொடர்கிறாள். உண்மையில் மிகப் பெரிய தரிசனம் உள்ள கதை. ஆனால் கதையின் போக்கும், அதன் தலைப்பும் இந்த திசையில் இல்லை.


வாழ்வை நடந்தது நடந்த படியே கூறுவதுதான் இலக்கியம் என்றால் சிசிடிவிகளும், நேரலை தொலைக்காட்சிகளும்தான் மிகச் சிறந்த இலக்கிய ஆசிரியர்கள். என்றால் ஒரு படைப்பு இலக்கியத் தகுதியை அடைய வேறு என்ன வேண்டியிருக்கிறது. அது காட்டும் வாழ்வில் இருக்கும் உணர்வு உச்சங்கள். எனில் நம் உணர்வை, கண்ணீரை, அறச்சீற்றங்களைத் தட்டி எழுப்புபவை எல்லாம் இலக்கியமாகிவிடுமல்லவா? இது வாசகரின் முன்னிருக்கும் முக்கியமான இக்கட்டு. வாசகன் திறந்த மனதுடன், தன்னைத் தானே சுயபரிசோதனை செய்யும் வகையில் அந்த உணர்வுகளை பரிசீலிக்க வேண்டும். தனக்கு வந்த அந்த உணர்வு உச்சம், வலிந்து ஏற்படுத்திக் கொண்டதா (நான் புரட்சியாளன், ஏழைப் பங்காளன், தன்னைப் போல பிறரை நேசிப்பவன் என அதற்கு பல வேடங்கள் இருக்கின்றன) அல்லது அது தான் உண்மையிலேயே தன் இயல்பா என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டும். அந்த உணர்வு உச்சம் இயல்பானதுதான் என அவன் உணர்ந்தால் அப்படைப்பு சந்தேகமே இல்லாமல் இலக்கியம்தான்.


இப்போது ஒன்று புரிந்திருக்கும், ஒரு படைப்பு வாசிக்கும் ஒருவரை வாசகராக்க வேண்டும். அச்சவாலை அப்படைப்பு சந்திக்கும் போது தான் அது இலக்கியமா அல்லவா என்ற வகைப்பாட்டிற்கே தகுதி உடையதாகிறது

இத்தொகுப்பின் ‘விடிவு’ கதையை எடுத்துக் கொள்வோம். ஒரு இரு சக்கரவாகன விபத்தில் நண்பனைப் பறிகொடுத்த ஒருவன். அந்த நண்பன் இறந்து அவனது உடல் வீட்டிற்குக் கொண்டுசெல்லப்படும் வரையிலான நிகழ்வுகள்தான் கதை. ஆனால் இக்கதை முழுக்க முழுக்க கதை சொல்லியை அவனது அக்கணத் தவிப்புகளாக நம்முள் கடத்துகிறது. அவன் அழவில்லை. ஆனால் யாருடையத் தோளிலாவது சாய்ந்து கொள்ள வேண்டுமென தேடுகிறான். ஆனால் ஒரு தோளும் அமையாத கணங்களில், சோர்ந்து போய், தளர்ந்து நிற்கும் தருணத்தில் முற்றிலும் எதிர்பாராத ஒருவரின் கைகளில் அடைக்கலமாகும் அந்த உச்சம், வாசகரிடமும் அந்த உணர்வு நிலையை எழுப்புகிறது. ஒருவகையில் மலையாளச் செவ்விலக்கியத் திரைப்படமான பரதம் படத்தின் உச்ச காட்சியை நினைவுபடுத்தியது. அனைத்தையும் விட முக்கியம், அந்த உச்சத்திற்குப் பிறகு வாசகரிடம் மானுடம் பற்றிய, இந்த வாழ்வைப் பற்றிய ஒரு நம்பிக்கையை விதைக்கிறது இக்கதை.



சரி, வாழ்க்கைத் தருணங்களை, அவை எழுப்பும் அதே உணர்வு உச்சங்களைப் பேசுவது மட்டுமே தான் இலக்கியமா? இது இலக்கியமாகும் முதல் தகுதி தான். உண்மையில் எந்த ஒரு படைப்புமே அது சொல்ல வரும் வாழ்க்கை இங்கே இதற்கு முன்பு எப்படி பேசப்பட்டிருக்கிறது என்பதைச் சந்திப்பதில்தான் அது இலக்கியத்தின் அடுத்த படிக்கு நகர்கிறது. உதாரணத்திற்கு இத்தொகுப்பில் இருக்கும் ‘பூதம்’ கதையை எடுத்துக் கொள்வோம். கதை முழுவதும் மிகச் சாதாரண நிகழ்வுகள். அந்த வாழ்வை இன்று பெரும்பாலான ‘இழந்த மனசுக்கார ஆண்கள்’ வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அனைத்துத் தரப்பு நியாயங்களும் கண்முன் தெரிகையில் எந்த ஒரு தரப்பையும் எடுக்கமுடியாமல், தன் முன்னே உள்ள நியாய, அநியாயங்களை விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பவர்களின் பிரதிநிதியான கதையின் நாயகன் இறுதியில் தன்னை விடமுண்ட நீலகண்ட சிவமாக உணர்வதில் முடிகிறது. அந்த புள்ளியில் இருந்து வாசகன் மிக நீண்ட தூரம் செல்ல முடியும். உண்மையில் தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று இது. இக்கதை அன்றாடத்தை மரபின் ஒரு புள்ளியில் இணைத்ததாலேயே இலக்கியமாகிறது. அந்த கடைசி பாரா மட்டும் இல்லாவிட்டால் இது ஒரு மிகச் சுமாரான, சாதாரணமான கதை. இந்த பூதம் கதையில் காளியின் இயல்பான அங்கதம் நன்றாகக் கைகூடியும் வந்திருக்கிறது.


இதே வகைமையில் வரத் தக்க மற்றொரு கதை ‘ஶ்ரீஜி’. தன்னெஞ்சறிய பொய் சொன்ன ஒருவரின் கதை. ஒரு நல்ல சிறுகதை என்பது அது முடிந்த பின் வாசகரிடம் துவங்க வேண்டும் என்பார் ஜெயமோகன். இக்கதை அதற்கு மிகச் சிறந்த உதாரணம். இக்கதையில் காளியின் மொழிபு திருக்குறளைச் சந்தித்திருக்கிறது.


வாழ்வும், உணர்வும், தத்துவங்களும் இருந்தால் இலக்கியம் எனச் சொல்லிவிட்டோம். அப்படியெனில் பேரிலக்கியம் என்பது என்ன? இன்னொருவக்கையில் இவ்வினாவைக் கேட்டால், இலக்கியம் என்பதை மிக அகலமான அலைவரிசையாகக் கொண்டால், அதன் உச்சம் என்பது என்ன? ஒரு படைப்பில் வரும் வாழ்வை வாசகனை உணர வைப்பது, அவ்வாழ்வுடனே அவனைப் பிணைப்பது ஆரம்ப கட்ட இலக்கியம் எனில், அவ்வாழ்வை, அவ்வாழ்க்கைத் தருணத்திற்கான தத்துவங்களை விவாதிப்பது, சுட்டுவதன் மூலம் வாசகனை அறிய வைப்பது அடுத்த கட்ட இலக்கியமாகிறது. ஆனால் இவ்விரண்டு தளங்களையும் தாண்டி அந்த வாழ்க்கைத் தருணத்தை அதன் உள்ளும் புறமுமாகக் காணச்செய்யும், அதை முழுமையாகப் பார்க்கச் செய்யும், படைப்புகளே இலக்கியத்தின் உச்சமாகும் தகுதி பெற்றவை. இதையே படைப்பின் தரிசனம் என்கிறார்கள் விமர்சனக் கோட்பாட்டாளர்கள்.


காவியம் என்பது இன்னும் ஒருபடி மேலே சென்று வாழ்க்கையை இந்த புடவிப் பெருக்கில் வைத்து, இன்னும் ஒரு மாபெரும் முழுமைத் தரிசனத்தைச் சொல்வது. அது வெண்முரசு, கம்பராமாயணம், சாகுந்தலம் போன்றவற்றிற்கே சாத்தியம். எனவே தான் காவிய ஆசிரியன் மெய்ஞானிக்கு இணையாக நம் மரபில் வைக்கப்படுகிறான்.


சிறுகதை என்னும் வடிவம் தரிசனங்களுக்கான வடிவம் அன்று. ஆயினும் அதில் தரிசனம் அமையக்கூடாது என்பதல்ல இதன் பொருள். மிகச் சிறந்த கதைகள் என்பவை இத்தகைய தரிசனங்களைக் கொண்டவை தான். புதுமைப்பித்தன், அசோகமித்திரன் என அத்தனை பேரிலக்கியவாதிகளும் இத்தகைய சிறுகதைகளை எழுதியிருக்கிறார்கள்.


இத்தொகுப்பில் ‘ஆர்வலர்’ என ஒரு கதை இருக்கிறது. பிறவற்றைப் போலவே சாதாரண நிகழ்வுகள். ஒரு இஸ்லாமியர் தன் குடியிருப்புப் பகுதியில் வந்து அசிங்கம் செய்யும் பன்றி ஒன்றின் குட்டிகளுக்கு இரக்கம் காட்டுகிறார். அவரது பேரன் அந்த குட்டிகளில் ஒன்றை விளையாட விரும்பிக் கேட்க அதை எடுக்கச் சென்றுவிடுகிறார். தாய் பன்றியின் கோபத்திற்கு ஆளாகிறார். அடுத்தநாள் அந்த தாய்பன்றி குட்டிகளோடு வேறு இடத்திற்கு போய்விடுகிறது. இத்தனை நாள் எப்படி அந்த பன்றிகளை வெளியேற்றுவது என கையைப் பிசைந்து கொண்டிருந்த அந்த குடியிருப்பு வாசிகள் இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து விழா எடுக்கிறார்கள். அனைவரும் அவரது அன்பான அணுகுமுறையால் தான் பன்றிகள் சென்றுவிட்டதாக அவரைப் புகழ்கிறார்கள். ஆனால் அவருக்கு மட்டுமே அதன் உண்மையான காரணம் தெரிகிறது. இந்த இடம் வரை இதுவும் ஒரு ‘ஶ்ரீஜி’ வகைக் கதை தான். ஆனால் அவ்விழாவில் அவரது ஏற்புரையாக வரும் இவ்வரிகள், ‘ஒருவரை நாம் வெறுக்கும் போதும், விரும்பும் போதும் ஒரு எல்லைக்குள் நிற்கிறோம். ஆனால் அது கொஞ்சம் நீண்டு போகும்போது ஒரு உரிமை எடுத்துக் கொள்கிறோம். அதுவரையிலான நம் அன்பு, எல்லை தாண்டும் போது உரிமை என்றாகிறது என்பது நமக்குத் தெரிவதில்லை. அப்போது அனைத்துமே தலைகீழாகிவிடுகிறது…. அது தெரிந்தபின் செய்வதற்கு ஒன்றும் இருப்பதில்லை.’


இவ்வரிகளே இக்கதையின் தரிசனம். அன்பு உரிமையாதல் என்பதே இன்று நம்முன் இருக்கும் மிகப் பெரிய சவால். அத்தனை உறவுகளின் கசப்படைதல்களின் ஆதார வேர் இது தான். ஆனால் இக்கதை மிக இயல்பாக இந்த புள்ளிக்கு வந்து நிற்கிறது. ஒரு எழுத்தாளராக காளியின் அடுத்த சவால் என்பது இவ்வரிகளை வாசகரைத் தாமே உணர்ந்து கொள்ள வைப்பதே.


அந்த சவாலிலும் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அவர் அடைந்ததே ‘ஆள்தலும், அளத்தலும்’ கதை. அனைத்து வகையிலும், காளியிடம் இருந்து நல்ல இலக்கியத்தரமான படைப்புகளை இனியும் எதிர்பார்க்கலாம் என வாசகருக்கு நம்பிக்கை தரும் படைப்பு.


காளிபிரசாத்திற்கு சிறுகதைத் தருணங்களைக் கண்டடையும் கண்கள் இருப்பதைப் போல அவற்றைக் கூறும் முறையும் நன்றாகக் கைவந்திருக்கிறது. அத்தருணங்களில் இருந்து பெற வேண்டியவற்றை அடையவும், அறிய வேண்டியவற்றை அறியவும் தேவையான வாசிப்பும், நுண்ணுணர்வும் இருக்கிறது. மீண்டும் மீண்டும் ஒரே வாழ்வியலை ஒரே போன்று எழுதுவதை அவர் சற்று கவனிக்கலாம். அந்தந்த கருக்களுக்கான மொழிகள் அமைய வேண்டும். இத்தொகுப்பின் அனைத்து கதைகளும் கிட்டத்தட்ட ஒரே மொழியில் தான் அமைந்திருக்கின்றன. மேலும் ஆடையற்ற பெண்ணுடல் என்பதும், ஒரு இருளான அறையில் நிகழும் உடலுறவு என்பதும் இந்த தொகுப்பில் இருகதைகளில் மைய நிகழ்வாகவும் (ஆள்தலும் அளத்தலும் மற்றும் கரி), பேச்சுவாக்கில் வருவதாக மேலும் இருகதைகளிலும் (பழனி மற்றும் பராசக்தி) வருகின்றன. அதையும் ஆசிரியர் ஏன் என சுயவிசாரணை செய்து கொள்ளலாம். உண்மையில் நிர்வாணம் என்பதும் ஒரு தரிசனம் தான். அதைத் தான் ஆசிரியர் முன்வைக்கிறார் எனில் அதை இன்னும் பல கோணங்களில் எழுதிப் பார்க்கலாம். மாறாக அவை அதிர்ச்சி மதிப்பீடு அல்லது கதையின் சுவாரசியம் என்ற புள்ளியில் அமைந்திருக்குமாயின், சரியான மாற்றைத் தேடலாம்.


ஒட்டுமொத்தமாக ஒரு தொகுப்பு எனப் பார்த்தால் இலக்கியத்தின் அனைத்து இடங்களிலும் சென்றமரத் தக்க ஐந்து சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றிருகின்றன. முதல் தொகுப்பு என்ற வகையில் இதுவே சாதனைதான். ஆனால் ஒரு எழுத்தாளராக அவர் செல்ல வேண்டிய தொலைவுகள் இன்னும் இருக்கின்றன. அதற்கான முதல் அடியாக இந்த ‘ஆள்தலும் அளத்தலும்’ இருக்கட்டும்.


எப்படி எழுதவேண்டும் எனச் சொல்வது விமர்சகனின் வேலை கிடையாது. அது விமர்சனத்தில் எல்லைக்குள்ளும் வராது. எழுத்து என்பது தடையின்றி எழுதப்படவேண்டியது தான். ஆனால் அந்த இடத்திற்குச் செல்ல எழுத்தாளர் தொடர்ந்து எழுதி எழுதி தன்னை மொழிக்கும், எழுத்திற்கும் நிரூபித்திருக்க வேண்டும். பின் ஒரு புள்ளியில் படைப்புக் கணங்களே அந்த எழுத்தாளனைத் தன் கையில் ஏந்தி தன்னைத் தானே நிகழ்த்திக் கொள்ளும். அத்தகைய கணங்கள் வாய்ப்பதாக நண்பருக்கு, எழுத்தாளர் காளிபிராசாத்திற்கு!



ஆள்தலும் அளத்தலும் - முன்னுரை

புத்தகம் வாங்க

Monday, April 19, 2021

ஷோஷா - ஐசக் பாஷவிஸ் சிங்கர் - (தமிழில்) கோ.கமலக்கண்ணன்

 

போலந்தில் வாழும் யூத சமூகத்தின் பின்னணியில் எழுதப்பட்ட நாவல். ஹிட்லர் ஒருபுறம் ஸ்டாலின் ஒருபுறம் என இரண்டுக்கும் நடுவில் வாழும் மக்கள். தான் வசிக்கும் தேசத்து மக்கள் ஒருநாளும் தன்னை துன்புறுத்தவோ   அடிக்கவோ கொள்ளவோ மாட்டார்கள் ஆனால்  ஹிட்லர் படையெடுத்து வந்து வென்று தன்னை சித்ரவதை கூடத்திற்கு அனுப்பினால் அதற்காக பொங்கியெழவும் மாட்டார்கள் என்கிற புரிதலும் கொண்ட யூதர்கள்.  சமூக, அரசியல், வாழ்க்கை, வலைப்பின்னல்களுடன் செல்லும் சுவாரசியமான நாவலான ஷோஷா  தமிழில் வெளியாகியுள்ளது.

 

முதற்வாசிப்பில் எளிமையான நேர்கோட்டுக் கதையாகத் தோன்றும் நாவலுக்குள் எத்தனை தளங்கள் இயங்குகின்றன என்று ஆச்சரியமும் உண்டாகிறது. எழுத்தாளனாக விளங்கும்  யூத இளைஞனின் வாழ்க்கைப் பின்னணியில் ஒரு பன்முக  சமூகத்தின்   வரலாறும் மனித மனங்களின் மாறுதல்களையும் மேன்மைகளையும் சொல்லிச் செல்கிறார்  ஐசக் பாஷவிஸ் சிங்கர்

 


(இங்கு ஒரு டிஸ்கி: - ஆயுர்வேத மருந்துகளின் பெயர்களுக்கே உள்நாக்கு சுருட்டிக் கொள்ளும் அபாயம் கொண்ட நான்.  ரஷ்ய பெயர்களையும் யூத  பெயர்களையும் முழுமையாக குறிப்பிட விரும்பவில்லை. அ.முத்துலிங்கம் தன் 'புளிக்கவைத்த அப்பம்' சிறுகதையில் சாரா என்கிற  ஒரு யூதரை சந்திக்கிறார். அவர் பெயரை இப்படியாக சொல்கிறார். " வாய்க்குள் கூழாங்கல்லை அடக்கிக் கொண்டு குலேபகாவலி என்று சொன்னால் ஒரு சப்தம் வருமே அதுதான் அவருடைய முழுப்பெயர். நான் ஒரு வசதிக்காக சாரா என்று வைத்துக் கொள்கிறேன்" என்று. வேறு வழியின்றி அவ்வாறே  நானும் அதை வழிமொழிகிறேன்.)

 

நெருங்கிய நண்பர்களால்  சுட்சிக் என்று செல்லமாகவும் பொதுவாக அரோலி என்றும் அழைக்கப்படும் நாயகன். எழுத்தாளனாக வாழ்பவன். அரொலி காதல் கொள்ளும்  வெவ்வேறு பெண்களில் ஒருவர் மக்களைப் புரட்சிகரமாக  சீர்திருத்த எண்ணும்  ரஷியாவை நேசிப்பவர். ஒருவர் வளமும் கவர்ச்சியும்  அமெரிக்க நடிகை. மற்றவர் அன்பான உள்ளூர் செல்வந்தர். உள்ளூர் பணிப்பெண் ஒருவர். இவர்களை விட,  தன் ஆழ்மனத்திற்கு அணுக்கமாக இருக்கும் இளம் பருவத்தோழி ஷோஷாவையே அரோலி மணம் புரிகிறான். நாவலுக்கு ஷோஷா என்று பெயர் வைத்தது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே தோன்றுகிறது.   நாவலை வாசித்ததும் அந்த தேசத்தில் இத்தியம் பேசி வாழ்ந்து வந்த யூத  மரபுக்கான  ஒரு  குறியீடாகவே ஷோஷாவை சிங்கர் சித்தரிக்கிறார் என்பது புரிகிறது. மென்மையான மனம் கொண்ட, எப்பொழுதும் அச்சத்தில் இருக்கிற வளர்ச்சி அடையாமல் குழந்தைத் தன்மையுடன்தான் இருக்கிறாள் ஷோஷா. அவள் தோற்றம் இருப்பு இரண்டுமே மற்றவர்களை இம்சிக்கிறது. வெகுஜனங்களுக்கு அவள் மீது பரிதாபமும் இருக்கிறது. அது அன்றைக்கிருந்த யூத இனத்தின் நிலைமைக்கே பொருத்தி வருகிறது. அவளுடைய தூய மனத்தைத்தான்  அராலி விரும்புகிறான். இதில் அவளை மணப்பதற்கு முன் அவனுடைய தந்தையின் சொற்களை அவன் மானசீகமாக கேட்பது முக்கியமான ஒன்று. அவனுடைய ஆழ்மனம் இத்தனை கால மரபு  கொண்ட தன்  இனத்தையே நேசிக்கிறது. தன் தந்தையின் குரலாக அதைக் கொள்கிறது.   இந்த நாவலுக்கு ஷோஷா என்கிற பெயர் தவிர வேறு எதை வைக்க முடியும்.




 

நம்பிக்கையுடன் கம்யூனிச தேசம் செல்லும் அவன் காதலி டோராவின் நண்பர் ஒருவர்,  உளவாளி என முத்திரை குத்தப்பட்டு சித்ரவதை அனுபவிப்பதன் சாரம் நாவல் இடையில் வருகிறது. அத்தனை சித்ரவதைகளைக் கண்ட பின்பும் அவள் அதன் மீது நம்பிக்கையுடன் இருக்கிறாள். மாறாக நல்ல வளத்துடன்  நடிகையாகும் எண்ணத்தில்  அமெரிக்காவிலிருந்து வரும் பெட்டி  மிகவும் அவநம்பிக்கை கொண்டவளாகவே இருக்கிறாள். வெறும் நம்பிக்கை மட்டுமே இருந்த ரஷ்யா,  செல்வம் இருந்தாலும் அவநம்பிக்கை கொண்ட அமெரிக்க தேசம் இவற்றுக்கிடையே ஷோஷாவை சுமந்துகொண்டு   ஊசலாடும் அரோலி. இந்த நுட்பமான சித்தரிப்பு நாவல் முழுவதும் உண்டு. இறுதியாக நாட்டை விட்டு வெளியேறும்போது அவனுக்கு பெட்டிதான் உதவுகிறாள்.

அவர்கள் அகதியாக கிளம்பி அந்த நகரை நீங்கும் போதே ஷோஷா இறந்து விட்டாள்  என்பதை பிற்காலத்தில் ஒரு உரையாடலில் அராலி உரைக்கிறான். பெரும் வர்ணனை இல்லாமல் அவள் முடிவு சொல்லப் படுகிறது. போர்க்கால நாவல்கள் நேரடியாக அதன் பாதிப்பை, போரின் வர்ணனையை சொல்வதை விடவும் அதற்கிடையே ஊடுருவி செல்லும் மக்களின் வாழ்க்கையையயும் துயரத்தையும் மீட்சியையும் சொல்வதுதான்  மனதை இன்னும் கனக்க  வைக்கிறது.  இறுதியில், யூதர்களை துரத்தியடித்து விட்டு யூதர்களுக்கான தனி நாடு உருவாக்க அனைத்து நாடுகளும் ஒற்றுமையாக வாக்களித்த அபத்தத்தின் மீது நகைப்பு செய்து நாவல் முடிகிறது.

 




இந்த நாவலை மிகவும் எளிய வகையிலும் செறிவாகவும் நம் நணபர் கோ.கமலக்கண்ணன் மொழி பெயர்த்துள்ளார். அவர் கடந்த  ஊட்டி காவிய முகாமில் அறிவியல் புனைவு குறித்து உரையாடியிருந்தார். உலக இலக்கியங்கள் மீது நல்ல வாசிப்பு கொண்டவர் என்பது புரிந்தது. ஷோஷா நாவல் மீதான அவரது புரிதலும்  மொழிபெயர்ப்பின் லாவகமும்  நாவலை இயல்பாக  வாசிக்க   வைக்கின்றன. எங்கு அந்த தேசத்து  வார்த்தைகளை அப்படியே உபயோகிக்கலாம், எங்கு தமிழ் மண்ணில் புழங்கும்  வார்த்தைகளை இடலாம் என்கிற  கவனம் இருப்பதால் எங்கும் நாவலின் இயல்புத்தன்மை கெடவில்லை. நெடுங்காலமாக டால்ஸ்தோய், தாஸ்தாவ்யேஸ்கி ஆகியோர் மொழிபெயர்ப்புகள் வாயிலாக தமிழக மக்களுக்கு அறிமுகமாகி மனதிற்கு அண்மையானவராகவும் விளங்குகிறார்கள். இவ்வருடம்   தமிழில் அறிமுகமாகியுள்ள சிங்கரும் இங்கு நீண்டகாலம் மனித இனத்தின் அன்பையும் உன்னதங்களை பேசியவராக ஷோஷா மூலம் நிலைத்து  நிற்பார் என்றே நாவலைப் படித்ததும் தோன்றியது. அதற்கு முதற்படி அமைத்திருக்கும் நண்பர் கமலக்கண்ணனுக்கு வாழ்த்துகள்

Saturday, April 3, 2021

பசித்த மானிடம் - எல்லையைக் கடந்த முன்னோடி

பசி வழி ஞானம்

நாவலில் ஒரு இடத்தில் 'காமோகாரிஷீத்: மன்யுரகாரீஷீத்:' என்று சொல்வதில் குறிப்பிடப்படும் ரிஷிகள் யாரு என்று ஐயம்  கேட்கிறார்கள் ஊரில் உள்ளவர்கள். வாத்தியார் அதற்கு பதில் சொல்கிறார். அது நான் செய்த அத்தனை தவறுகளும் தன் காமத்தால் செய்தேன் . கோபத்தால் செய்தேன் என்று உணர்ந்து சொல்வது என்று. 




எழுத்தாளர் கரிச்சான்குஞ்சு என்று அறியப்படும்   ஆர்.நாராயணசாமி அவர்கள் எழுதி, தமிழ் இலக்கிய உலகில் மிகவும்  புகழ்பெற்ற நாவல் பசித்த மானிடம். கணேசனும் கிட்டாவும் தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட இடர்களும் பெற்ற புரிதல்களும் நாவலின் கதை. கும்பகோணம் மன்னார்குடி நகரங்களும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களும் கதைக்களம். 

ஒருபுறம் காமத்தால் அல்லாடும் கணேசன் மற்றொரு புறம் கோபமும் சந்தேகமும் கொண்டவனாய் மாறியிருக்கும் கிட்டா. பணம் இல்லாததால் இளம் வயதில் டிரைவர் / மெக்கானிக் வேலைக்கு  போகும் கிட்டா சிறு வயதுமுதல் எதிர்பார்ப்பது தான் ஒரு முக்கியஸ்தன் என்று மற்றவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதுதான். சிறுவயதில் அவமானப்பட்டு ஊரை விட்டு கிளம்புவதிலிருந்து தொடர்ந்து வருவது அவனுடைய அணுக்கமான மக்கள் அவன் மீது  காட்டும் மரியாதையின்மை. பின் வேலைதேடி அலைவது, பின் மணம் கொள்ளப்போகும் காலங்களிலும்   செட்டியார் மகள் உதாசீனப்படுத்துவது தன் அக்காள் மகள் ஏற்க மறுப்பது இறுதியில்  தன் மகன் கூட தன்னை எதிர்ப்பது என இந்த உளைச்சலில் இருந்து   அவன் மனம் விடுபடவில்லை..

காமம் வேட்கை ஆகிய பசியின் வழி எழுந்து வந்து  அதற்கான உணவு உண்ட பின்னும் அடங்காத இருவரின் வாழ்க்கையையும் ஞானியாக மாறிய கணேசன் உணர்ந்து உரைக்கிறான், உடலின் பசி உள்ளதின் பசி இரண்டும் கடந்தபின்னும் அந்தப் பசித்த மானிடங்களை  நிறைவடையாமல் வைத்திருப்பது என்ன என்று ஆராய்கிறது நாவல். கணேசனை குருவாக உணரும் பசுபதியின் சொற்களை இறுதியில் நினைத்துப் பார்க்கிறான்.  ஒருவகையில் அவனுக்கு சீடனாக வந்த குருவாக பசுபதியே இருக்கிறான்.




நாவலில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது அந்த முன்னோடி  எழுத்தாளரான கரிச்சான்குஞ்சுவின் தெள்ளிய மொழிவளம்.  ஒரு  சிறிய நகரத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் எந்தளவு ஒரு குழுவாக இருக்கிறார்கள் என்பதை சொல்வது நாவலின்  குறிப்பிடத்தக்க ஒரு இடம். சிங்கத்தின் ஆள் மீது ஜவுளிக்கடைக்காரருக்கு ஈர்ப்பு. அவர் அவனை தன்னிடம் அனுப்ப கேட்கிறார். அப்போது சிங்கம் ஜவுளி கடைக்காரரிடம் சொல்கிறார்.." யோவ்.. இது அயர்ன் ராஜாபார்ட் சரக்கு.. இவ்ளோ செலவு பண்ணி இவனை தயார் பண்ணிருக்கேன்.. உனக்கு பைசா இருந்தா சொல்லு.. இதே போல இன்னொண்ணு தயார் பண்ணி தறேன்.. இவனை தர முடியது.. " 


குறிப்பிடத்தக்க மற்றொன்று. மனிதர்கள் மீதான நுட்பமான வர்ணனை.  தோப்பூர் எனும் கிராமத்தில் ஒரு கணக்கப்பிள்ளை இருக்கிறார். தோப்பூரின் அத்தனை  நில பத்திரபதிவுகளும்  கொடுக்கல் வாங்கலிலும் பஞ்சாயத்துகளிலும் அவர்தான் முக்கிய புள்ளி. தீர்ப்பு அல்லது முடிவு எட்டப்படும் முன் அவர் வார்த்தைக்கும் பெரிய மதிப்பு உண்டு. அவர் வைத்ததுதான் சட்டம். பட்டாமணியார் வாரிசு இல்லாதவர் என்பதால் ஊரில் உள்ள பாட்டிகள் விதவைகள் எல்லாருக்கும் இவர்தான் ராஜா மந்திரி எல்லாமே என்கிறார் கரிச்சான் குஞ்சு. விவசாயம்  சார்ந்த குத்தகை உழவுப்பணம் ஆகிய அனைத்திற்கும் இவரை நம்பித்தான் இருக்கிறார்கள். கிட்டா வேலைதேடி வெளியூர் போகும்போது கிட்டாவின் அம்மா  அவனிடம் சொல்வதே, எதானாலும் நேரில் வந்து சொல். கடிதம் எழுதினால் அவர் வழியாகத்தான் நமக்கு வந்து சேரும் என்று. 

கணேசனுக்கு பூணூல் போட்ட கல்யாணத்தில் கிடைத்த மொய்பணத்தை எண்ணி வாத்தியாரிடம் கொடுக்கையில், இதை வைத்து இன்னும் பலருக்கு சிறப்பாக நல்லது செய்யவேண்டும் என ஆசீர்வதிக கிறார் கணக்கப்பிள்ளை சீனி ஐயங்கார்.  அவருடைய மேன்மையான மனம் அப்போது எழுந்து வருகிறது. ஆனாலும் அவர் இதை எப்பொழுது  வேண்டுமானாலும்  இதை தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வார்; அப்போது அவரிடம் சொல்ல தனக்கு சரியான பதில் உள்ளதா என யோசித்து வாங்கிக் கொள்கிறார் வாத்தியார்.  அனாதையான கணேசனுக்கு ஒரு சுப காரியம் செய்த திருப்தியில் ஊரே இருக்கும் போது,  அந்த நேரத்தில் சீனியின் மேன்மை யதார்த்தமாக  வெளிப்படுகிறது என்பதும் அதை  அந்த ஊர் எவ்வளவு கவனமாக கையாள்கிறது  என்பதும் எளிமையாகவும் நேரடியாகவும் சொல்லிவிடுகிறார்.  




மன்னார்குடியை சேர்ந்தவனாக இருந்தாலும் மன்னார்குடியிலேயே நிகழும் இந்த  நாவலை இந்த வாரம்தான்  வாசித்தேன்.  கரிச்சான் குஞ்சு ஒரு தமிழாசிரியர்.  மன்னார்குடியில் நான் பயின்ற பள்ளியில்  தமிழாசிரியராக பணியாற்றியுள்ளார். ஊரின் இடங்களை குறிப்பிடுகிறார் ஆனால் நிலம் பற்றிய பெரிய வர்ணனைகள் இல்லை.  அதேநேரம் மனிதர்கள் மீதான அவதானிப்பும் வர்ணனையும் திகைக்கவே வைக்கின்றன. இது எழுதப்ப ட்ட காலத்துக்கும் முன்னால் நிகழும் கதை. காமம்  ஆசை எல்லாம் அப்பட்டமாக எழுதுகிறார். சில நேரங்களில் பக்கங்களைப் புரட்டவே தயக்கமாக இருக்கும் அளவு கதாபாத்திரம் மீது கருணை உண்டாகிறது.  அந்த 'அப்பட்டமான' என்பது காமத்தை வர்ணிப்பதில் இல்லை. கதையோட்டத்தில்தான் இருக்கிறது.  தொழுநோயாளிகளின்  பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை தகாஉறவுகளின்  போது எழும் மனவோட்டத்தை  வர்ணிக்கையில் அவர் கையாலும் இயல்புத்தன்மை குறிப்பிடத்தக்கது.  இலக்கியத்தின்  எல்லைகளை மீறும் எழுத்திற்கு பசித்த மானிடம் ஒரு முன்னோடி படைப்பாக என்றுமே இருக்கும்